தமிழ் இனம் தற்போது எந்தவித அடிப்படை உரிமைகளும் இல்லாது எந்தவித அதிகாரமும் இல்லாது ஒரு நிலையற்ற தன்மையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றது என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இனப்படுகொலை இடம்பெற்றது என்பது தொடர்பில் பிரித்தானியாவிலும் பிரேரணைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
அது தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு பிரித்தானிய நாடாளுமன்றிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தமிழ தலைவர் அண்ணாமலை பிரித்தானியா சென்று தமிழ் புலம்பெயர் அமைப்புக்களை சந்தித்து கலந்துரையாடியதோடு, தமிழருக்கான சம உரிமையை வென்றெடுப்பதற்கு 13 ஆம் திருத்தமே ஒரே வழி என தெரிவித்திருந்தார்.
அதனை புலம்பெயர் அமைப்புக்களும் ஏற்றுக்கொண்டுள்ளன என கதிர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆயுதப் போராட்டக் காலத்தில் தமக்கான ஒரு கட்டமைப்பு இருந்ததாகவும் அதன் வழியே தாம் அரசில் செயற்பாடுகளை முன்னெடுத்ததாகவும் தெரிவித்தார்.
தற்போது அந்த கட்டுமானம் இல்லாத காரணத்தினால் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கு 13ஆம் திருத்த சட்டத்தை ஒரு கட்டுமானமாக்கொண்டு, தொடர்ச்சியான எமது தீர்வை நோக்கி நகர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழர்கள், நாட்டின் ஆட்சியாளர்களால் பல்வேறு வகையிலும் அடிமைப்படுத்தப்பட்டு அடிப்படை உரிமைகள் இல்லாமல் செய்யப்பட்டு, தமிழின இருப்பையே இல்லாது செய்யும் முயற்சியே முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழர்கள் தொடர்பில் முன்னெடுத்த சில விடயங்கள் தமிழர்களுக்கு நன்மை பயப்பதாக அமைந்துள்ளன. அதற்கு நாம் பிரதமருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தேசியம் பேசும் சில அரசியல்வாதிகள் 13ஆம் திருத்தத்தை ஏற்க முடியாது எனவும், இந்தியாவின் செயற்பாடுகளுக்கு எதிராக கருத்து வெளியிட்டும் வருகின்றனர்.
இவ்வாறானவர்கள் மக்களை ஏமாற்றி தொடர்ந்தும் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டு தங்களின் ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதற்கு பதிலாக மக்களுக்கான நேர்மையான அரசியலை கொண்டு போவதற்காக செயலாற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.