அமெரிக்க பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் காலநிலை மாற்றத்தை ஆராய்வதற்கான வசதிகளுடன் கூடிய சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றினை கொத்மலை பிரதேசத்தில் நிர்மானிப்பதற்கான திட்ட அறிக்கை ஒன்று ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜயவர்தனவினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிர்மாண பணிகளுக்காக கொத்மலை பிரதேசத்தில் சுமார் 400 ஏக்கர் அளவு காணி தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பிரதேசத்தின் நிலை குறித்து ஆராய்வதற்காக ருவான் விஜயவர்தன உள்ளிட்ட குழுவினரும் அண்மையில் அவ்விடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.
இந்நிலையில், காணி ஒதுக்கிய பின்னர்குறித்த பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்கு இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் உதவத் தயாராக இருப்பதாக ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பான முழுமையான திட்ட அறிக்கை எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.