கடந்த 8 மாதங்களுக்கு முன் காணாமல் போன 14 வயது சிறுமி ஒருவர் பேலியகொட பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த 14 வயது சிறுமி பேலியகொட பகுதியில் தனது 22 வயது காதலனுடன் தங்கியிருந்த நிலையில் பேலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் 24 ஆம் திகதி லுணுகல சூரியகொட பகுதியில் உள்ள 14 வயது சிறுமி ஒருவரை காணவில்லை என சிறுமியின் பெற்றோரால் லுணுகல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலதிக வகுப்பிற்கு சென்று வருவதாக தெரிவித்து வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி காணாமல் போயிருந்தார்.
அதனைத்தொடர்ந்து லுணுகலை பொலிஸாரால் சிறுமி குறித்த தகவல்கள் அனைத்து பொலிஸ் நிலையத்திற்கும் வழங்கப்பட்டு தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் லுணுகலை பொலிஸார் வழங்கிய தகவலுக்கு அமைவாக பேலியகொட பொலிஸாரால் குறித்த சிறுமியும் 22 வயது இளைஞர் ஒருவரும் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் லுணுகலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த சிறுமி அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவருடன் பேலியகொட பகுதியில் வாடகை விடுதியொன்றில் தங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது. மேலும் காணாமல் போன போது 14 வயதாக இருந்த குறித்த சிறுமியின் வயது தற்போது 15 வயதும் 4 மாதங்களும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுமியை கடத்தி துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குறித்த 22 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரும் இன்று சனிக்கிழமை பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்