தனியார் பேருந்துகளை ஜி.பி.எஸ் மூலம் கண்காணிப்பதற்கு கண்டி நகர அபிவிருத்திக் குழு தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில், கண்டி மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கும் தனியார் பேருந்துகளை ஜி.பி.எஸ் சாதனங்களைப் பயன்படுத்தி தொடர்ந்து கண்காணிக்கவும், நெரிசலைக் கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய கண்டி நகர அபிவிருத்திக் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், நகரின் அபிவிருத்தி தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது அக்குழுவின் பணியாகவும் காணப்படுகின்றது.
குறித்த குழுவின் விசேட கூட்டம் அண்மையில் கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதுடன், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் தனியார் பேருந்துகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, கண்டி வீதிகளின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்துவதை மட்டுப்படுத்துதல் மற்றும் கூடுதல் வாகன தரிப்பிடங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல முன்மொழிவுகளை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
உலக வங்கி நிதியின் கீழ் மத்திய மாகாணத்தில் சில தனியார் பேருந்துகளுக்கு ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,சாதனங்கள் இல்லாத பேருந்துகளுக்கு சாதனங்களை பொருத்துமாறும் மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.