நாட்டின் அனைத்து ஆடைத்தொழிற்சாலைகளையும் மூடும் நிலை ஏற்படும் – எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.ம.ச!

இலங்கையில் கடந்த 6 மாதங்களில் மட்டும் ஆடைதொழிற்துறையின் வருமானம் 1.9 பில்லியனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், அரசாங்கம் இது தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன எனவும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலைமை தொடர்ந்தால், அனைத்து ஆடைத்தொழிற்சாலைகளையும் மூட வேண்டிய நிலைமை ஏற்படலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஆடைத்தொழிற்சாலைகள் படிப்படியாக மூடப்பட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது.

தேசிய உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலேயே இந்த 200 ஆடைத்தொழிற்சாலைகளும் ஆரம்பிக்கப்பட்டன எனவும் தெரிவித்துள்ளார்.

பல தொழிற்சாலைகள் இப்போது கூட மூடப்பட்டுவிட்டன. சில தொழிற்சாலைகள் இலங்கையை விட்டு வேறு நாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.

கடந்த 6 மாதங்களில் மட்டும் ஆடைத்தொழிற்துறையினால் பெற்றுக் கொள்ளப்பட்ட வருமானம் 1.9 பில்லியன் அளவில் குறைவடைந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பங்களாதேஷ் ஆடைத்தொழிற்துறை ஊடாக, 19.6 பில்லியன் வருமானத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தேசிய வருமானத்தை உயர்த்த பெரும் பங்காற்றிய ஆடைக் கைத்தொழில், இன்று வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், இதனை பாதுகாக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கே அதிகளவில் ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஜி.எஸ்.பி. வரிச்சலுகையும் இல்லாமல் போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிதாக வருமானம் பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளை தேடுவதைப் போன்று, வருமானம் ஈட்டிவரும் தொழிற்துறைகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதனைக் கவணத்தில் கொள்ளாவிட்டால் ஆடைத்தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதோடு, ஆயிரக்கணக்கான தொழில்வாய்ப்புக்களும் இல்லாது போகும் நிலைமையே நாட்டில் ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply