இலங்கையில் வருமானம் இழந்துள்ள மத்திய கலாசார நிதிய ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஏனைய பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக, திறைசேரியின் ஊடாக நிதியொதுக்குவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், சுற்றுலா நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய கலாசார நிதிய ஊழியர்களின் வருமானம் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, மத்திய கலாசார நிதிய ஊழியர்களின் சம்பளத்திற்காக மாதாந்தம் சுமார் 11 கோடி ரூபாவும், பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் இரண்டு கோடியே 50 லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட வேண்டும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
மத்திய கலாசார நிதியத்தில் நிலையான தொழிலாளர்கள் இரண்டாயிரத்து 330 பேர் பணிபுரிகின்ற அதேவேளை, சாதாரண மற்றும் ஏனைய ஊழியர்கள் 230 பேர் பணிபுரிகின்றனர்.
இந்த நிலையிலேயே, சுற்றுலாத் துறை வழமைக்குத் திரும்பும் வரை, அவர்களின் சம்பளம் மற்றும் ஏனைய பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக, 13 கோடியே 50 லட்சம் ரூபா நிதியை திறைசேரியிலிருந்து மாதாந்தம் ஒதுக்குவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார்.