குருந்தூர் மலை வன்முறையை தூண்டியவர்கள் என்பதற்காக பொலிசார் தண்டிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
“ முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குமுழமுனை பிரதேசம் தமிழர்களுடைய வரலாற்றுடன் தொடர்புடைய இடம்.
அங்கே ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ளதாயினும் தற்போது உடைந்த நிலையில் உள்ளது. இங்கே தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக வழிபாடுகளை மேற்கொண்டு வந்துள்ளார்கள்.
யுத்தத்தின் பின் கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்னதாக அவ்விடத்தில் இருந்த ஆதி சிவன் ஐயனார் சிலை இனவாத வெறியர்களினால் அகற்றப்பட்டு உடைத்து எறியப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த இடத்தில் தமிழ் மக்கள் வழிபாட்டு நடவடிக்கைளில் ஈடுபட்டு வந்துள்ள நிலமையில் கடந்த 14 ஆம் திகதியும் அந்த இடத்தில் பொங்கல் செய்து வழிபாடுகளை மேற்கொள்வதற்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அவ் இடத்திற்கு சென்றிருந்தார்கள். நாங்களும் வழிபாடுகள் செய்ய சென்றிருந்தோம்.
அப்போது அங்கு தென்னிலங்கையில் இருந்து வருகை தந்த பௌத்த பிக்குகளும் சிங்கள இளைஞர்களும் வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களில் ஈடுபட்டிருந்தார்கள்.
அவ் இடத்தில் பொலிசார் பௌத்த பிக்குளுக்கு ஆதரவாகவும், சிங்கள பௌத்த பேரினவாத கும்பலுக்கு சார்பாகவும் செயற்பட்டிருந்தார்களே தவிர, தமிழ் மக்கள் வழிபாடுகளை மேற்கொள்ள இடையூறு செய்தமைக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒரு கட்டத்தில் நாங்கள் ஆலய பீடத்தில் ஏறி வணக்க நிகழ்வுகளை செய்ய முற்பட்ட போது பொலிசார் தடை விதித்தார்கள். அப் பீடத்திற்கு முன்பாக பொங்கல் செய்வதற்கு அடுப்பினை பற்ற வைத்த போது பொலிசார் தடை விதித்து காலால் உதைந்து அந்த தீபம் அணைக்கப்பட்டது.
அந்த பீடத்திற்கு முன் அமர்ந்து பஜனைகளை செய்ய முற்பட்ட வேளையில் பௌத்த பிக்குகள் ஆலய பீடத்தில் ஏறி பிரித்து ஓதும் செயற்பாடுகளை செய்தார்கள். அப்போது எமது மக்களும் அந்த பீடத்தில் ஏறி வணக்க நிகழ்வுகளை செய்ய முற்பட்ட போது பொலிசார் தமிழர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினார்கள். அப்போது சலசலப்பு நிலமை தோன்றியது.
அதற்கு பிற்பாடு பௌத்த பிக்குகள் அந்த இடத்தில் இருந்து பொலிசாரால் வெளியேற்றப்பட்டு அதனைத் தெர்டந்து பொலிசாரினால் வழிபாடுகளுக்கு வந்த தமிழ் மக்களும் வெளியேற்றப்பட்டனர்.
அந்த இடத்தில் பொலிசார் அங்கு நின்ற பெண்கள் சிலரின் மார்பகங்கள் மற்றும் நெஞ்சில் தள்ளி கேவலப்படுத்தியது மட்டுமல்லாது முதியவர்கள், சிறுவர்கள் என்ற வேறுபாடு இல்லாது அனைவரையும் இழுத்து விழுத்தி அவர்களை அச்சுறுத்தி அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.
நாங்கள் நிலத்தில் இருந்து பஜனை செய்து கொண்டிருந்த போது நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூறிய பிற்பாடும் எனது சேட்டில் பிடித்து இரண்டு மூன்று முறை இழுத்து அந்த இடத்தில் இருந்து அகற்ற முயற்சி செய்தார்கள். முழங்காலால் எனது முதுகில் தள்ளி கீழே விழுத்தினார்கள்.
கைகளை பிடித்து இழுத்து நிலத்தில் போட்டு மோசமாக அவமானப்படுத்தினார்கள். அதேபேன்று முன்னால் மாகாண சபை உறுப்பினர் ரவிகரன், சமூக செயற்பாட்டாள் பீற்றர் இளஞ்செழியன், வேலன்சுவாமிகள் மற்றும் எங்களுடன் வந்திருந்த செயற்பாட்டாளர்கள் தவபாலன் உட்பட பலர் மோசமாக தாக்கப்பட்டர்கள்.
இது எங்களது வழிபாட்டு உரிமையை மறுக்கின்ற செயல். அடிப்படை உரிமையை மோசமாக மீறுகின்ற செயல். நாங்கள் மிக மோசமாக துன்புறுத்தல், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளோம். நீதிமன்றில் இந்த நிகழ்வை தடை செய்ய கோரி பொலிசாரால் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த வழக்கில் தடையுத்தரவு வழங்கப்படாது, நீதிபதி அவர்கள் தெளிவாக வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கியிருந்தார். அதன் பிற்பாடு கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் தான் நேரடியாக இந்த செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்கள். வன்முறையை துண்டியதற்காக பொலிசார் தண்டிக்கப்பட வேண்டும் “ என தெரிவித்தார்