ஜனாதிபதித் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருட இறுதியில் நடத்த திட்டமிட்டிருந்தாலும் அடுத்த வருட முதல் காலாண்டில் தேர்தல் நடத்தப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதுடன் அதற்கான நிதியை அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.எம்.எல். ரத்நாயக்க மற்றும் ஆணைக்குழுவின் ஏனைய அதிகாரிகளுடன் கடந்தவார இறுதியில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடுகள் தேவை எனக் கேட்டுள்ள ஜனாதிபதி, அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை தயார் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் பணத்தை உள்ளடக்கி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு விரைவில் வழங்கப்படும் எனவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.