வடமாகாணத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட சுகாதார தொழிலாளர்கள் உள்ளூராட்சி மன்றங்களில் பணி புரியும் நிலையில் அவர்களின் அடிப்படை உரிமைகள் அரசாங்கத்தினால் மறுக்கப்பட்டு வருவதாக யாழ் மாவட்ட சுகாதார தொழிலாளர்கள் நலன்புரி சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட சுகாதார தொழிலாளர் நலன்புரி சங்கத்தின் செயலாளர் நாகராசா ஜீவிதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் உள்ள 17 சுகாதார சங்கங்களையும் உள்ளடக்கியே யாழ்.மாவட்ட சுகாதார தொழிலாளர் நலன்புரி சங்கம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தொற்று நோய்கள் அதிகளவில் பரவும் அபாயம் காணப்படும் சூழலிலும் அவர்கள் எந்த விதமான பாதுகாப்பு ஏதனங்களும் இன்றி மக்கள் மத்தியில் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய அதிகாரிகள் இருந்தும் சுகாதார தொழிலாளர் வர்க்கத்தின் பாதுகாப்புத் தொடர்பில் சிந்திக்காது உள்ளனர் என கவலை வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார தொழிலாளிகள் தொடர்பில் எந்தவித நலன்சார் திட்டங்களும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.
இதன் காரணமாக சுகாதார தொழிலாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் கூட வடமாகாணத்தில் மறுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு திண்மக்கழிவுகளை அகற்றும் சுகாதார தொழிலாளிகளுக்கான எந்தவிதமான பாதுகாப்பு அங்கிகளும் வழங்கப்படவில்லை.
அரசாங்கமும் உரிய நிர்வாக அதிகாரிகளும் இது தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்காது அசண்டையீனமாகச் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.