அமெரிக்காவில் மின்னல் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இந்திய மாணவி உடல் நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் சுஸ்ருன்யா கோடுரு வயது 25 என்ற இந்திய மாணவி தகவல் தொழில்நுட்ப கல்வியை பயின்று வந்தார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 2ம் திகதி சான் ஜசிண்டா நினைவுச்சின்னப் பூங்காவின் குளத்திற்கு அருகே உள்ள நடைபாதையில் சுஸ்ருன்யா கோடுரு அவரது நண்பருடன் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அவர் மீது திடீரென மின்னல் தாக்கியது, இதனால் சுஸ்ருன்யா கோடுரு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு, வென்டிலேட்டரில் உயிருக்கு மிக மிக ஆபத்தான நிலையில் வைக்கப்பட்டு இருந்தார்.
இதற்கிடையில் சுஸ்ருன்யா கோடுருவின் குடும்பம் ஹைதராபாத்திலிருந்து ஹூஸ்டனுக்கு வர முயற்சி செய்து கொண்டு இருந்த நிலையில், சுஸ்ருன்யா கோடுருவின் பெற்றோருக்கு அமெரிக்கா விசா அனுமதி வழங்கியுள்ளது, மேலும் அவர்கள் அடுத்த வாரம் அமெரிக்கா சென்று சேர்வார்கள் என PTI தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்திய மாணவி சுஸ்ருன்யா கோடுருவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் கடந்த வாரம் முதல் அதிசயிக்கத்தக்க வகையில் இயற்கையாக சுவாசிக்க தொடங்கியுள்ளார், மேலும் அவர் வென்டிலேட்டர் உதவியில் இருந்தும் வெளியே எடுக்கப்பட்டுள்ளார்.
சுஸ்ருன்யா கோடுருவின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வரும் மருத்துவர்கள், வென்டிலேட்டர் உதவி இல்லாமல் நல்ல முறையில் முன்னேறி வருகிறார், அவரது உடல்நிலையில் இந்த முன்னேற்றம் தொடர்ந்தால் அவருக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.