சோதனைச் சாவடிகள் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு அவசரக் கடிதம்!

வட மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் குறித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணவர்தனவிற்கு அவசர கடிதமொன்றை இன்று அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில், “காரணம் இல்லாமல் யாழ் மாவட்டத்தில் அதிகரிக்கும் சோதனை சாவடிகள் தொடர்பாக நான் முறைப்பாடு ஒன்றினை முன்வைக்கிறேன்.

வட மாகாணத்தின் அதி உயர் பாதுகாப்பு வலையத்துக்கு வெளியே குறைந்தளவான சோதனைகளுடன் சுதந்திரமாக நடமாடுவதற்கான சூழ்நிலை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் நிலவியது. இதன் காரணமாக மக்கள் சுதந்திரமாக உணர்ந்தார்கள்.

ஆனால் தற்போது யாழ் மாவட்டத்தில் பல இடங்களில் சோதனை சாவடிகள் காணப்படும் அதேவேளை, அவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இதன் காரணமாக வியாபாரம், மீன்பிடி உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோரும், இரவு நேரங்களில் பயணங்களை மேற்கொள்வோரும் பல சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

படையினரால் மக்களை நோக்கி முன்னெடுக்கப்படும் பல செயற்பாடுகள் காரணமாக வட மாகாணத்தின் பொதுமக்கள் பெரிதும் அச்சத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

தேவையான இடங்களில் பாதுகாப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருப்பது தொடர்பாக பாராட்டுக்களை தெரிவிக்கும் அதேவேளை, தேவையற்ற இடங்களில் சோதனை சாவடிகளை அமைத்து பாதுகாப்பின் பெயரால் மக்களை கஷ்டங்களுக்கு உள்ளாக்கும் செயற்பாட்டை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுக்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir