வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய 100 நாட்கள் செயல்முனைவின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் முன்வைக்கப்பட்ட சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை உறுதி செய்யக் கோரி இன்றைய தினம் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை காந்திப் பூங்காவில் குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் மட்டக்களப்பு இணைப்பாளர் ஜெ.கோபிநாத் தலைமையில் இடம்பெற்றது.
இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதான இணைப்பாளர் க.லவகுசராசா உட்பட சிவில் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வினைக் கோருகின்ற வகையிலான கோசங்கள் முன்வைக்கப்பட்டு, பதாதைகளை ஏந்தியவண்ணம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் இறுதியில் 100 நாட்கள் செயல்முனைவில் மக்களினால் முன்வைக்கப்பட்ட 16 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மக்கள் பிரகடனமும் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.