மீண்டும் செயலிழந்த குமுதினி படகு!

யாழ்ப்பாணம் குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவுகளுக்கு இடையிலான குமுதினி படகு சேவை இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் செயலிழந்துள்ளது.

சில மாதங்களாக குமுதினி படகு பழுதடைந்த நிலையில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனால் யாழ்.தீவுகளுக்கு இடையிலான போக்குவரத்து நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதனையடுத்து, 70 இலட்சம் ரூபா செலவில் குமுதினி படகை போக்குவரத்திற்கு தயார்ப்படுத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

படகு திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை கடலுக்குள் இறக்குவதற்கான நடவடிக்கை அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, படகுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஐந்து தடவை பரீட்சார்த்தமாக குமுதினி படகு இயக்கப்பட்டது.

படகினை மீள செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில், படகினை மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கான நிகழ்வு ஆரம்பமாவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன் படகினை இயக்கி குறிக்கட்டுவான் இறங்குதுறைக்கு கொண்டு செல்லும் போது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு செயலிழந்தது.

இந்நிலையில், படகின் செயலிழந்த இயந்திரப் பகுதி திருத்தப் பணிக்காக நீர்கொழும்புக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாண பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply