கடந்த ஜூன் மாதம், தென்னிந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்த 11 பெண் துப்புரவுப் பணியாளர்கள், அதிஸ்ட இலாபச் சீட்டு வாங்கியதன் மூலம் கடந்த வாரம், அவர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் ஜாக்பாட் தொகை கிடைத்துள்ளது.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பரப்பனங்காடி நகரில் உள்ள வீடுகளில் இருந்து மக்காத குப்பைகளை சேகரிக்கும் குறித்த பெண்கள் வழக்கமாக ஒரு நாளைக்கு 250 ரூபாய்களைக் கூலியாகப் பெறுகின்றனர்.
சம்பாதிக்கும் பணம் போதுமானதாக இல்லையெனவும், தங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் இதர செலவுகளுக்கு கடன் வாங்கியுள்ளதாகவும் தெரிவித்த அவர்கள், அதனால்தான் எப்போதாவது சேர்ந்து அதிஸ்ட இலாபச் சீட்டு வாங்குவதாகத் தெரிவித்தனர்.
பல இந்திய மாநிலங்களில் அதிஸ்ட இலாபம் பெரும்பாலும் சட்டவிரோதமானது. ஆனால் கேரளாவில் தனியார் அதிஸ்ட இலாப நிறுவனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளதோடு, அரசாங்கமே மிகவும் பிரபலமான இத் திட்டத்தை நடத்துகிறது.
குறித்த பெண்கள் குழு முன்னர் ஒருமுறை 1,000 ரூபாய் பரிசை வென்றதாகவும் அதனைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டதாக தெரிவித்தனர்.
மேலும், இவ்வளவு பெரிய தொகையை வெல்வோம் என தாங்கள் எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்திருந்தனர்.