கொவிட்-19 தொற்றுறுதியான முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன் 4 மாதங்கள் ஆகியுள்ளன.
கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி சுற்றுலா வழிகாட்டியான இலங்கையர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
இந்த நிலையில், நாட்டில் நேற்றைய தினம் 300 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
இலங்கையில் நாளொன்றில் அதிகளவான கொரோனா தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்ட தினமாக நேற்றைய தினம் பதிவானது.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் நேற்றைய தினம் 283 பேருக்கு கொவிட்-19 தொற்றுயதியானது.
இதேநேரம், நேற்று முன்தினம் 56 பேருக்கு தொற்றுறுதியாகியிருந்தது.
இதற்கமைய, கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இதுவரையில் 339 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேநேரம், நேற்றைய தினம் இந்தியாவிலிருந்து நாடுதிரும்பிய 9 பேருக்கும், பாகிஸ்தானிலிருந்து நாடுதிரும்பிய ஒருவருக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடுதிரும்பிய 3 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறதியானது.
அத்துடன், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தொற்றுறுதியான ஒருவருடன் தொடர்பிலிருந்த மேலும் 3 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் தொற்றுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 454 ஆக அதிகரித்துள்ளது.
ஆயிரத்து 980 பேர் பூரண குணமடைந்துள்ள நிலையில், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 463 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை. வட மாகாணத்தில் 7 குடும்பங்களை சேர்ந்த 28 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் இது தொடர்பான விபரங்களை எமது செய்திச் சேவைக்கு வழங்குகிறார்.
இதேவேளை, கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் நாட்டில் பல்வேறு பாகங்களில் அடையாளம்காணப்படுவதாக சமூக ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுபவர்கள் தொடர்பில் கடுமையான சட்ட நடடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக காவல்துறை பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன தெரிவித்துள்ளார்.