மின் கொள்வனவு பெயரில் நிதி மோசடி – சஜித் பிரேமதாச

நாட்டில் விரைவில் மின்சார உற்பத்தியில் சிக்கல் ஏற்படும் என சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அதன்மூலம் அரச தரப்பினர் டொலர்களில் கொள்ளையடிக்கத் தயாராகுவதாக குற்றஞ்சுமத்தினார். மேலும், நாட்டுக்கான மருந்து கொள்வனவின்போதும் இவ்வாறே நிதி மோசடி இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘பிரபஞ்சம்’ வேலைத்திட்டத்தின் கீழ் 74ஆவது கட்டமாக அநுராதபுரம் வித்யாதர்ஷ தேசிய பாடசாலைக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பஸ் ஒன்று நேற்று(02) வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் விரைவில் மின் உற்பத்தியில் சிக்கல் ஏற்படும். எனவே, தனியார்த்துறையை நாட வேண்டிய நிலை ஏற்படும். அவசர கொள்வனவு எனும் பெயரில் விலைமனுக்கோரல் முறையில் இருந்து விலகி செயற்படுவதற்கு நேரிடும். அதில் பணம் சுரண்டுவதே இடம்பெறும்.

டீசல் மாபியாக்கள், எரிபொருளைப் பயன்படுத்தி மின்சார விநியோகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் உட்பட பல தரப்புகள் இந்த அவசர நிலையைப் பயன்படுத்திக் கொண்டு டொலர்களில் தரகுகளைப் பெறத் தயாராக உள்ளனர். மருந்துகளை கொள்வனவு செய்யும் போதும் இவ்வாறே இடம்பெற்றது.

மருந்துகளை இறக்குமதி செய்யும்போது மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபை சட்டத்தின் 58ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவு செய்யப்பட்ட விலைமனுக்கோரல் கொள்முதல் முறையை விடுத்து, பதிவு செய்யப்படாத மருந்துகளை இறக்குமதி செய்வதில் கையாட்களை வைத்து பெரும் தரகுகளைப் பெறும் ஊழல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறே, மின்சார நெருக்கடிக்கும் வழிவகுக்கப்படும். டீசல் மாபியாவையும் தனியார் மின் உற்பத்தி மாபியாவையும் முன்னிறுத்தி விலைமனுக்கோரல் இல்லாமல் மின்சாரத்தை வாங்க அரசாங்கம் தயாராகி வருகிறது.

இவை அனைத்தும் இரண்டு முறை மின் கட்டணத்தை 500 சதவீதத்தால் அதிகரித்துக் கொண்டே செய்யப்படுகிறது. இவ்வாறு அதிகரிக்கப்பட்டாலும் தொடர்ந்து மின்சாரம் வழங்க தனியாரிடம் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

அவ்வாறு இல்லையென்றால் தொடர்ந்து மின்சாரம் வழங்க முடியாது என அரசாங்கம் தெரிவிக்கிறது. இந்நிலையில், தண்ணீரின்றி உடவளவ விவசாயிகளும் மட்டுமின்றி நாடு முழுவதுமுள்ள விவசாயிகளும் நிர்க்கதியாகியுள்ளனர்.

முறையான நீர் வழங்கல் முகாமைத்துவம் இல்லை என்றும்,இது தொடர்பாக அரசாங்கத்திடம் சரியான முன்னாயத்த கணிப்பீடுகள் எதுவும் இல்லை என்றும்,எந்த புரிதலும் இன்றி தண்ணீர் பிரச்சினை நிலவுகிறது.

விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க முடியாது என அமைச்சரவை கூட முடிவு செய்துள்ளது.

தற்போதைய அரசாங்கத்துக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை. தற்போதைய அரசாங்கத்தால் பாடசாலை குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க முடியவில்லை. என்றாலும்,ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் ஒவ்வொரு பாடசாலை குழந்தைகளுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு ஸ்மார்ட் குடிமகன்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply