மட்டக்களப்பிற்கு பயணமாகும் பிரதமர் – பாரிய போராட்டத்திற்கு தீர்மானம்!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்தன பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் மட்டக்களப்பு கச்சேரியில் பிரதமர் தலைமையில் உணவு பாதுகாப்பு சம்பந்தமான கூட்டம் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்திற்கு மாவட்டத்தின் விவசாய சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? அல்லது கச்சேரி அலுவலக மட்டத்தில் உள்ளவர்களுக்காக இந்த கூட்டம் இடம்பெறுகிறதா? என்பது தொடர்பான விளக்கத்தினை தமக்கு கச்சேரி மட்டத்தில் உள்ள அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என விவசாய கமக்கார அமைப்புகள் தங்களது ஆதங்கங்களை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக உணவு பாதுகாப்பு சம்பந்தமாக பேச வேண்டுமாக இருந்தால் விவசாய கமக்கார அமைப்புகளுடன் தான் பேச வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

பிரதமரின் வருகை எதற்காக என்ன நோக்கத்திற்காக என்பது தெரியாத காரணத்தினால் கமக்கார அமைப்புகள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.

அண்மை காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்து வருகின்ற அராஜகங்கள் அத்துமீறிய காணிக் கொள்ளைகள் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் திட்டமிட்ட தொல்பொருள் எனும் போர்வையில் கண்ட இடமெல்லாம் புத்தபகவானுக்கு சிலை வைப்பது போன்ற நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இது போன்ற விடயங்களை சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்கள் பிரதமருடன் பேச வேண்டும் பிரதமருக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்ற போதிலும் குறித்த அமைப்புகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

எது எவ்வாறாக இருந்தாலும் நாளைய தினம் புறக்கணிக்கப்பட்ட சமூகமாக விவசாயக் கமக்கார அமைப்புகள் மற்றும் பிரதமரை சந்திக்க விரும்புவர்கள் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப் போவதாகவும் அறிய முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply