பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகளுக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நேற்று அம்பாறை மொண்ட்டி ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது அம்பாறை மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய துறைகள் சம்மந்தமாக விரிவாக விளக்கியிருந்ததோடு, தனது கோரிக்கையை பைசல் காசிம் முன்வைத்தார்.
பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் சமாதானம் மற்றும் மனித உரிமைகளுக்கான முதலாவது செயலாளர் ஹென்றி டொனாடி, துணை நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் மிஸ்லி நிசார் மற்றும் முன்னாள் சுகாதார அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளருமான பைசல் காசிம் ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நடைபெற்றது.
இதன்போது ஹென்றி டொனாடி, பிரித்தானிய ஆளுகைக்கு உட்பட்டிருந்த காலத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் இன்றும் பயனளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வாழும் முஸ்லீம் சமூகத்தில் பெரும்பான்மையை கொண்டுள்ள அம்பாறை மாவட்டம் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் கணிசமான மக்கள் தொகையினை கொண்டிருப்பதையும் , அவர்களுக்கான அபிவிருத்திகளின் பட்டியலையும் முன்வைத்திருந்தமை மற்றுமொரு முக்கிய அம்சமாகும்.
இவ்வாறு நீண்ட உரையாடலின் இறுதியில் பிரித்தானிய மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் நட்புறவினை பிரதிபலிக்கும் வகையில் உயர்ஸ்தானிகராலயத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் மத சகிப்பின்மைக்கு தீர்வு காணுதல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய வேலைத்திட்டங்களை நாடு தழுவிய வகையில் மேற்கொள்ளுமாறும், இலங்கை தீவுக்குள் தீர்க்கப்படாத நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கான கலந்துரையாடல்களை மேற்கொள்ள முன்வருமாறும் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு வாழ்வாதார உதவித்திட்டங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பாராளுமன்ற உறுப்பினர் குறித்த பிரதிநிதிகளை கேட்டுக்கொண்டார்.
(கே.எ.ஹமீட் )