ஊரடங்கு தொடர்பாக வெளியான தகவல்

கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட மாட்டாதென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொது மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என தகவல் தொடர்பாடல் மற்றும் உயர்கல்வியமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மாத்திரமே பலப்படுத்தப்படும். கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் மத்திய நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்களினால் சமூக தொற்றாக பரவலடைய வாய்ப்பில்லை.

தேர்தலை இலக்காகக் கொண்டு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைளை அரசாங்கம் தளர்த்தவில்லை. கடந்த மூன்று மாத காலமாக நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும், சுகாதர அறிவுறுத்தல்கள் முறையாக பின்பற்றப்பட்டன.

கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் புதிதாக கடந்த வாரம் அடையாளம் காணப்பட்டார்கள். கந்தக்காடு விவகாரத்தினால் கொவிட் -19 வைரஸ் சமூக தொற்றாக பரவலடைவதற்கு வாய்ப்பில்லை.

தற்போதைய நிலையில் ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட மாட்டாது. அதற்கான தேவையும் தற்போது தோற்றம் பெறவில்லை.

பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மாத்திரம் கடுமையாக அமுல்படுத்தப்படுவதுடன், பல புதிய விடயங்களும் அறிமுகப்படுத்தப்படும். நிலைமையினை எதிர்க் கொள்ள சுகாதார தரப்பினரும், பாதுகாப்பு தரப்பினரும் தயாராகவே உள்ளார்கள்.

ஆகவே கொவிட்-19 வைரஸ் பரவலை அரசாங்கம் முறையாக கட்டுப்படுத்தும் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனத் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir