2019 ஆம் ஆண்டு தனது திருமண விருந்துடன் தொடர்புடைய மின்சாரக் கட்டணத்தில் மில்லியன் கணக்கான ரூபா செலுத்தப்படாமல் உள்ளதாக வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும், செலுத்தப்படாததாகக் கூறப்படும் மின்சாரக் கட்டணம் தொடர்பில் எழுத்துபூர்வமாக விளக்கமளிக்குமாறு தாம் விடுத்த கோரிக்கைக்கு இலங்கை மின்சார சபை இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் நாமல் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், நாமலின் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாததாகக் கூறப்படுவது ராஜபக்ச குடும்பத்தை அவதூறு செய்யும் சதி என்று தெரிவித்திருந்தார்.
தேசிய மக்கள் கட்சியின் உறுப்பினர் நளின் ஹேவகே, அண்மையில் செய்தியாளர் சந்திப்பில், நாமல் ராஜபக்ச 2019 இல் அவரது திருமண வரவேற்பு தொடர்பான மின்சாரக் கட்டணத்தில் 2.6 மில்லியன் ரூபா செலுத்தப்படாமல் உள்ளதாகவும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாம் மேற்கொண்ட விசாரணைக்கு பதிலளிக்கும் வகையில் இத்தகவலை இலங்கை மின்சார சபை தனக்கு வழங்கியதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.