சினோபெக் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதியில் இருந்து வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் மின்சக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தரவுகளுக்கு அமைய 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 109 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சினோபெக்குடன் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டுள்ளதாக வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதியில் இருந்து வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சினோபெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
முடியுமாயின் அதற்கு முன்னரே குறித்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் சினோபெக் நிறுவனத்தினர் இலங்கை கனியவள கூட்டுதாபனத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ள அதியுச்ச சில்லரை விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு தீர்மானித்துள்ளனர்.
எனினும் எந்தவொரு நிறுவனமும் இலங்கை கனியவள கூட்டுதாபனத்தின் விலை நிர்ணயத்தை விடவும் அதிக விலையில் எரிபொருளை விற்பனை செய்ய முடியாது எனவும் வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில் தங்களது வர்த்தக செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியும் என ஏனைய சர்வதேச எரிபொருள் நிறுவனங்களும் அறியப்படுத்தியுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.