தற்போதுள்ள பட்டதாரி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விசேட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் சேவையிலிருந்து விலகிய ஆசிரியர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மாகாண சபைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் உரிய அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்படும் என அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கணிதம், விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பம் ஆகிய பாடங்களுக்கு 5ஆயிரத்து 400 பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள மாகாண சபைகளுக்கு ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், தற்போது சுமார் 32ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், எதிர்காலத்தில் அரசு பள்ளிகளுக்கு 8ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்கும் திட்டத்தையும் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் அறிவித்ததுடன் குறித்த ஆட்சேர்ப்புகளில் 5ஆயிரத்து 500 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இரண்டாம் மொழி கற்பித்தலில் நிபுணத்துவம் பெற்ற 2ஆயிரத்து 500 ஆசிரியர்கள் உள்ளடங்குவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை என்ற தொனிப்பொருளில் நேற்று ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கல்வி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார். .