இலங்கையில் தொடரும் சீன ஆக்கிரமிப்பு – அரச ஆதாரவுடன் நடந்தேறும் பாரிய திட்டம்!

மொனராகலயில் சீனாவின் புதிய திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

காட்டு மரங்களில் இருந்து கரி தயாரிக்கும் சீனாவின் திட்டத்தை எதிர்த்தே தனமல்வில மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

20 களிமண் உலைகளைக் கொண்ட முதலீட்டு சபையின் இந்தத் திட்டம் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என பல குற்றச்சாட்டுக்கள் பொதுமக்களால் முன்வைக்கப்படுகின்றன.

இவ்வாறான நிலையில், மொனராகல – தனமல்வில, அரம்பேகம ஆகிய இடங்களில், குறித்த கரி தொழிற்சாலையை திறப்பது சில சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதாகத் தெரிவித்து, கிராம மக்கள் எதிர்ப்பு வெளியிட்டதை அடுத்து, இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

எனினும் சீனாவின் இந்த திட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் முழுமையாக  அங்கீகரம் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் எந்தவொரு அனுமதியையும் வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன திட்டத்தின் தள மேலாளரின் கூற்றுப்படி, இதில் 60 சதவீதம் இலங்கைக்கும் 40 சதவீதம் சீனாவிற்கும் வழங்கப்பட்ட கூட்டாண்மை முயற்சியாக இது காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இங்கு ஒவ்வொரு உலைகளுக்குள்ளும் எரிக்கப்படும் 4.5தொன் மரத்திற்கு 1தொன் கரியை உற்பத்தி செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்துக்கு கழிவு மரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் என தள மேலாளர் கூறிய போதிலும், கடந்த வாரம், செயலிழந்த உலைகளுக்குள் தேக்கு உட்பட பெறுமதியான மரக் கட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த திட்டத்திற்கு உட்பட்ட அரம்பேகம பகுதியில் பல மாதங்களாக நீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், கிணறுகள் பெருமளவில் வறண்டு வருகின்றன எனவும், மக்கள் தண்ணீருக்காக கிணறுகளை அருகில் உள்ள வீட்டாருடன் பகிர்ந்து கொள்கின்றனர் எனவும் பயிர்களின் சேதம் அதிகமாக உள்ளது எனவும் இதன் காரணமாக யானைகள் போன்ற வன விலங்குகள், உணவு தேடி கிராமத்துக்குள் ஊடுருவத் தொடங்கியுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த தொழிற்சாலைக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களும் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply