ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக இன்று நள்ளிரவு முதல் மாற்றப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சரவை பேச்சாளரும் போக்குவரத்து அமைச்சருமான பந்துல குணவர்தன இதனை குறிப்பிட்டார்.
குறித்த அறிவித்தலை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பான யோசனை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
இதன்படி நாளை முதல் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தவிர்க்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், ரயில் பொறியியலாளர்கள் சங்கம் நள்ளிரவு முதல் போராட்டத்தில் குதிப்பதாக மீண்டும் அறிவித்துள்ளது.
ரயில்வே தொழிற்சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இன்று காலை முதல் அலுவல ரயில்கள் உட்பட மொத்தம் 36 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.