பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர்களை கூடிய விரைவில் சட்டத்திற்கு முன் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தாக்குதலுடன் தொடர்புடைய சகலரையும் சட்டத்திற்கு முன் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அனைவரதும் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.
உத்திக பிரேமரத்னவிற்கு வழங்கும் பாதுகாப்பை அதிகரிப்பதோடு, தாக்குதல் தொடர்பாக துரிதமாக விசாரணைகளை நடத்தி சந்தேக நபர்களுக்கு தண்டனை வழங்குங்கள் எனவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
இதேவேளை, துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவிக்கையில்,
குறித்த விடயம் பாரதூரமானது எனவும், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபரை கண்டுபிடிப்பதை விட துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான சதித்திட்டத்தை கண்டறிவது முக்கியமானது எனத் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விடயங்களை கண்டறியுமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் தாயசிறி ஜயசேகர தெரிவிக்கையில்,
சம்பவத்தை சாதாரண விடயமாக கருதிவிட வேண்டாம். இது சகல நாடாளுன்ற உறுப்பினர்களுக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலாக பார்க்கப்பட வேண்டும் என்பதோடு, சம்பவம் குறித்து உரிய விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.