இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் அரச பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி வெளிநாடுகளுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை அரச நிறுவனங்கள் ஆராய்ந்து நாட்டுக்கு ஆபத்தான உடன்படிக்கைகள் இருந்தால் அவற்றை ரத்து செய்யும் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது போன்ற சுமார் 150 ஒப்பந்தங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலானவை சீனாவுடன் கைச்சாத்திடப்பட்டவை எனவும் தெரியவந்துள்ளது.
பல்கலைக்கழக விவசாயத் திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களும் சில அமைச்சுக்களும் இவ்வாறான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுபோன்ற ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் முன், வெளியுறவு அமைச்சகத்துக்கு தகவல் தெரிவித்து, பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுவரையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கைகளை தனித்தனியாக ஆராய்ந்து நாட்டுக்கு பாதகமான ஒப்பந்தங்கள் இருப்பின் அதிலிருந்து உடனடியாக விலகுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தேசிய பாதுகாப்பு சபை பணிப்புரை விடுத்துள்ளது.