சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகள் மற்றும் நகைகளை நாட்டிற்கு கொண்டு செல்ல முயன்ற ஐந்து பயணிகளை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
அதன்படி, துபாயில் இருந்து இரண்டு தனி விமானங்களில் இலங்கை வந்த நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண், சுமார் 123 மில்லியன் பெறுமதியான 6 கிலோ தங்க பிஸ்கட் மற்றும் நகைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நான்கு பெண்களில், மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் இன்று அதிகாலை 1.10 மணியளவில் துபாயில் இருந்து இலங்கை வரும் FlyDubai விமானத்தில் இலங்கை வந்ததாகவும், மற்றைய பெண் 5.25 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்ததாகவும் இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை சுங்க அதிகாரிகள் அவர்களது உடலிலும், அவர்கள் எடுத்துச் சென்ற கைப் பொதிகளிலும் தங்க பிஸ்கட்டுகள் மற்றும் நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் கொழும்பு பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும், அவர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு அடிக்கடி விமானங்களில் செல்வதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மேற்கொண்டு வருகின்றது.