கனேமுல்ல சஞ்சீவ என்றழைக்கப்படும் பாதாள உலக நபரான சஞ்சீவ குமாரவிடம் இருந்து பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் முல்லேரியா பிரதேசத்தில் இரண்டு துப்பாக்கிகளை இலங்கை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர் விசாரணைகளின் போது தெரிவித்த தகவலின் அடிப்படையில் முல்லேரியா குமார மாவத்தையில் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.
‘கனேமுல்ல சஞ்சீவ’ கடந்தமாதம் 13ஆம் திகதி நேபாளத்தில் இருந்து வந்திறங்கிய போது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், பாதாள உலகப் பிரமுகரை விசாரிக்க, பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து 90 நாள் காவலில் வைக்க உத்தரவு பெறப்பட்டது.
மேலும் படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கருதப்படும் கனேமுல்ல சஞ்சீவ பின்னர் நேபாளத்துக்குத் தப்பிச் சென்றதாகவும், அவரை கைது செய்ய இன்டர்போல் ‘சிவப்பு எச்சரிக்கை’ பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.