இந்தியா இலங்கைக்கு இடையில் செய்துக்கொள்ளப்பட்டுள்ள கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தித்துறை ஒத்துழைப்பு ஒப்பந்தம் வெளிப்படைத்தன்மையற்றதாக உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று 27/2 கீழ் கேள்வி எழுப்பும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
பால் உற்பத்தித்துறையில் தன்னிறைவடைய இந்தியாவால் முடிந்துள்ளது. அது அவர்களது திறமை எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தித்துறை ஒத்துழைப்பு ஒப்பந்தம் முதல் தடவை பேச்சுவார்த்தைகளின் போது தோல்வியடைந்திருந்தது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், தற்போது இந்த ஒப்பந்தம் வெற்றியளித்துள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளதுடன், அதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
அன்று தோல்வியடைந்த ஒப்பந்தம் இன்று வெற்றிபெற ஏதுவாக இருந்த காரணிகளை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்.
ஒப்பந்தத்தை கைச்சாத்திட அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானங்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையான பேச்சுவார்த்தைகள் அவசியமாகும் எனத் தெரிவித்துள்ளார்.
தான் எவர்மீதும் சேறு பூச இந்த கேள்விகளை எழுப்பவில்லை எனவும், தொழிற்சங்கங்கள்தான் இந்த விடயத்தை தனது கவனத்துக்கு கொண்டுவந்தன எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தொழிற்சங்க உறுப்பினர்கள் துறைசார் அமைச்சரிடம் சென்று கேள்வியெழுப்பியபோது, தமக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்துதான் அந்த அமைச்சரவைப் பத்திரம் அனுப்பட்டதாகவும் தமக்கு இதில் ஒன்றும் செய்ய முடியாது என பதிலளித்துள்ளடன், இதில் தாம் கையெழுத்திட்டதாகவும் கூறியுள்ளார்.
இதுதான் வெளிப்படைத்தன்மையா? எமது நாட்டில் 30 இற்கு அதிகமான என்.எல்.டி.பி பால் உற்பத்தி மையங்களையும் மில்க்ரோவையும் விற்பனை செய்வதா அரசாங்கத்தின் நோக்கம் என கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுதான் சௌபாக்கிய ஆட்சியின் எதிர்கால திட்டமா? செல்வந்தர்களுக்கு இது சௌபாக்கிய திட்டமாக இருக்கலாம். ஆனால், முழு நாட்டுக்கும் இது மோசமான திட்டம் எனத் தெரிவித்துள்ளார்.