ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இரட்டை வேடம் தற்போது நாட்டு மக்களுக்கு தெளிவாகப் புரிந்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ராஜபக்சர்களின் ஆசிர்வாதத்தோடு ஆட்சிக்கு வந்த தலைவர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட தவணையை உரிய நேரத்திற்கு பெற முடியாமல் தோல்வியடைந்துள்ளனர்.
மக்கள் ஆணையற்ற அரசாங்கத்தின் இறுதி நாடகமே தற்போது அரங்கேற்றப்படுகிறது.
பண வீக்கம் குறைந்துள்ளதாக அரசாங்கம் ஆய்வுகளை வெளியிட்டாலும், உண்மையிலேயே பணவீக்கம் குறைந்துள்ளதா அல்லது அதிகரித்துள்ளதா என்பதை சந்தைக்கு சென்று பார்த்தால் நடைமுறை ரீதியாக புரிந்து கொள்ள முடியும்.
அரசியலமைப்பின் பிரகாரம் பல்வேறு தேர்தல்களை நடத்த வேண்டியுள்ள தருணத்திலும் தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என அரசாங்கம் கூறிவருகிறது.
அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதாக கட்சி சம்மேளனத்தில் கூறிய ஜனாதிபதியே தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான ஆணைக்குழுவை நியமித்து தனது இரட்டை வேடத்தை நாட்டுக்கு காண்பித்துள்ளார்.
மக்களின் உரிமைகளையும் ஜனநாயக உரிமைகளையும் மீற வேண்டாம் என அரசாங்கத்தை நாம் கேட்கிறோம்.
தேசிய தேர்தல் ஒன்றிற்கு சென்று மக்கள் ஆணையை கோருவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.