பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தனியார் துறையினரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முந்திய கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு நிலையான வளர்ச்சியை நோக்கி நகர்த்துவதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்த வேலைத்திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி தனியார் துறை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக தனியார் துறையினரால் வழங்கப்படும் முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
அங்கு அரசாங்கத்தின் வருமானம் மற்றும் வினைத்திறனை அதிகரிப்பது, முதலீட்டாளர்களை ஈர்ப்பது, சுற்றுலாத்துறை, ஆடைத் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை மேம்படுத்த எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்கள் ஜனாதிபதியிடம் யோசனைகளை முன்வைத்தனர்.