12 ஆவது சுற்று பேச்சுவார்த்தையில் இலங்கை – இந்தியா!

2018ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான முன்னெடுப்புக்களை மீள ஆரம்பிக்கும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 12ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் நேற்றைய தினம் வரை கொழும்பில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டின் பிரதான ஏற்றுமதிச் சந்தைகளைப் பாதுகாத்து ஊக்குவிப்பதன் மூலம் ஏற்றுமதி பல்வகைப்படுத்தலுக்கு ஆசியா மற்றும் கிழக்காசியாவிலுள்ள மிகப்பெரிய பொருளாதாரங்களுடன் இணைவதே இலங்கை அரசாங்கத்தின் நோக்கமாகும்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் உலக பெறுமதிச் சங்கிலியின் ஊடாக பிரதான தரப்பினர்களுடன் இணைவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார கூட்டுறவானது வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய இரு நாடுகளினதும் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததாகும்.

முன்னுரிமையான துறைகளில் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை விரிவாக மேம்படுத்தும் நோக்கத்துடன் 2018ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்ட ETCA தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த ஜூலை மாதம் இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இதன்படி, வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் தலைமைப் பேச்சுவார்த்தையாளரும், வர்த்தகத் திணைக்களத்தின் இணைச் செயலாளருமான ஆனந்த் ஸ்வரூப் தலைமையிலான 19 இந்திய அதிகாரிகள் குழு இலங்கை வந்து இந்த விரிவான ஒப்பந்தம் குறித்து கலந்துரையாடியுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply