பாராளுமன்றத்தில் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் எதிராக வழக்குத் தொடர முடியாது என இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றில் தெரிவித்த கருத்து தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்றையதினம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பாராளுமன்றத்தில் அண்மையில் தெரிவித்த கருத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவருக்கும், அவரது தொழில் மற்றும் பண்புக்கும் பாதகமானது எனக் கூறி, சட்டத்தரணி திமித்ரி ஷிராஸ் அகஸ்டஸ் பியட்ரஞ்செலி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
நாடாளுமன்ற மரபுப்படி, நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தொடர்பாக இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட முடியாது என மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ரணசிங்கவுக்கு எதிராக தகுந்த தண்டனைகளை வழங்குமாறும், அவருக்கு ஏன் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்கான காரணத்தைக் காட்டுமாறும் மனுதாரர் தரப்பு நீதிமன்றத்திடம் மேலும் கோரியுள்ளது.