கத்தியால் குத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மருத்துவமனையில் அனுமதி!

​​நாரஹேன்பிட்ட பகுதியில் நேற்றையதினம் பொலிஸ் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களில் இருவர் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் போக்குவரத்து கடமையில் இருந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர், ஹெவ்லொக் வீதியில் வீடமைப்புத் தொகுதிக்கு அருகில் நின்று,கொழும்பிலிருந்து கிருலப்பனை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்தினர்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த மோட்டார் சைக்கிளை நெருங்கியதும் சந்தேகநபர்கள் நாரஹேன்பிட்டி உத்யான வீதியை நோக்கி ஓடியதைத் தொடர்ந்து பொலிஸார் அவர்களை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்றுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த துரத்தலின் போது, ​​சந்தேக நபர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தரை கத்தி மற்றும் கண்ணாடி போத்தல் மூலம் குத்திவிட்டுச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின்போது மூன்று நபர்களில் இருவர் கைது செய்யப்பட்டனர், அதே நேரத்தில் ஒரு சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் இராஜகிரியவில் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply