இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த வழக்கு இன்று காலை மேன்முறையீட்டு நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது, புதிய விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சார்பில் ஆஜரான சட்டத்தரணி, இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி தனது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கு மேலும் கால அவகாசம் கோரினார்.
அதன்படி, இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கபட்டது.
மேலும், விளையாட்டுத்துறை அமைச்சர் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதிமொழி ஒன்றை வழங்கியதுடன், தனக்கு முன்னோடியாக இருந்த ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என உறுதியளித்தார்.
கடந்த நவம்பர் 6ஆம் திகதி அன்று அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் ஏழு பேர் கொண்ட இடைக்கால குழு நியமிக்கப்பட்டது.
உலகக் கோப்பையை வென்ற இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணி தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ. இமாம்; ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா, அர்ஜுன ரணதுங்க , உபாலி தர்மதாச, ரகித ராஜபக்ஷ மற்றும் ஹிஷாம் ஜமால்தீன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெறுகின்றனர்.
மறுநாள், மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலக் குழுவுக்கு 14 நாள் தடை உத்தரவு பிறப்பித்தது. ரணசிங்கவின் இந்த நடவடிக்கையை சவாலுக்கு உட்படுத்தி இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் விக்கும் களுஆராச்சி ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பின்னர், நவம்பேர் 13ஆம் திகதி, தடை உத்தரவை நீக்கக் கோரி, அமைச்சர் ரணசிங்க மனு தாக்கல் செய்திருந்தார்.
இருந்தபோதிலும், நவம்பர் 27 அன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணசிங்கவை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கினார்.
ரணசிங்கவிற்கு பதிலாக புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக, சுற்றுலாத்துறை அமைச்சராக கடமையாற்றிய ஹரின் பெர்னாண்டோ இவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.