போதைப்பொருள் ஒழிப்புக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையான யுக்திய செயற்றிட்டத்தில் தொடர்ச்சியாக, நேற்று நண்பகல் 12:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரப் பணியில் இலங்கை பாதுகாப்புப் படையினர் மேலும் ஆயிரக்கணக்கான சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இந்த காலகட்டத்தில் மொத்தம் 1,865 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
40 சந்தேக நபர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 134 பேர் புனர்வாழ்விற்காக அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், 145 சந்தேக நபர்களுக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது, 613 கிராம் ஹெராயின், 746 கிராம் மெத்தாம்பேட்டமைன்,16.5 கிலோ கிராம் கஞ்சா,3,142 போதை மாத்திரைகள், 272,041 கஞ்சா செடிகள், 16 கிராம் ஹாஷ் மற்றும் 49.4 கிலோகிராம் மாவா போன்ற போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
டிசம்பர் 17 அன்று யுக்திய நடவடிக்கையின் கீழ் சிறப்புச் சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, பாதுகாப்புப் படையினர் 10,000 க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்துள்ளதுடன் பெரிய அளவிலான போதைப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, பிரபல குற்றப் பிரமுகர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான பல மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை, பொலிஸாரின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.