இலங்கையின் அரசியல் வரலாற்றிலேயே வடக்கு – கிழக்கின் தமிழ் அரசியல் தலைமை நாட்டின் அரசியல் ஆட்சி அதிகாரத்தை ஐ.தே.கட்சியினரே வகிக்க வேண்டுமென்னும் விருப்புடன் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வந்தமையை யாவரும் அறிவர்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் ஆரம்ப காலத்திலேயே ஐ.தே.கட்சியின் ஆட்சியின்போது அமைச்சர் பதவி வகித்து வந்தமை தெரிந்ததே.
1965ஆம் ஆண்டு இடம்டபெற்ற இலங்கை நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலில் வடக்கு – கிழக்கில் அதிக ஆசனங்களைப் பெற்றிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஐ.தே.கட்சி ஆட்சிபீடமேறுவதற்கு உறுதுணையாக இருந்தமையோடு அக்கட்சி சார்ந்த செனட் சபை உறுப்பினரான அமரர் மு.திருச்செல்வம் என்பவரை அமைச்சராக்கி ஐ.தே.க. அமைச்சரவையில் பங்கேற்றிருந்தது. இக்காலப்பகுதியில்தான் தமிழ்ப் பிரதிநிதிகளின் எதிர்ப்புக்கள் எவையுமின்றியே கிழக்கிலங்கையில் சில சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்றிருந்தமையும் இங்கு பிரதானமாகக் குறிப்பிட்டேயாக வேண்டும்.
தமிழ் ஈழம் என்னும் வரலாற்றுப் புகழ்வாய்ந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்வைத்து 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது மேற்படி இரு கட்சிகளும் பிரதானமாக இணைந்து அமைந்திருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியானது அவ்வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான வடக்கு – கிழக்கு மக்களின் ஆணையை மிகவும் வலுவான வாக்குப் பலத்துடன் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றம் சென்றமையும் தெரிந்ததே.
நாடாளுமன்றம் சென்ற இக் கூட்டணியானது தமிழ் ஈழம் வெறு நாடு ஸ்ரீலங்கா வேறு நாடு என்னும் வாய்ப்பாட்டை உஷாராக உச்சரித்து நின்றபோதும்கூட அவர்களுடைய வழக்கமான ஐ.தே.கட்சியின் பாலான கள்ளக் காதலினால் வட்டுக்கோட்டைத் திர்மானத்தைச் சிறிதளவேனும் மனக்கூச்சமில்லாமல் கொச்சைப்படுத்தியமையோடு, அத்தீர்மானத்துக்கான ஏகோபித்ததும் வலுவானதுமான மக்கள் ஆணையையும் துஷ்பிரயோகம் செய்து, ‘ஜே.அர்.பிரேமதாஸ. ஐ.தே.க. ஆட்சியின் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்குத் துணைபோன அமெரிக்க ஏகோபித்தியவர்களின் சதி முயற்சிகளக்க உறுதுணையாகவுமிருந்தனர்.
இதன் விளைவாக அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த இளைய தலைமுறையினர் அவர்களுடைய சுயரூபத்தை இனங்கண்டமையோடு அவர்கள் மீது மிகுந்த சீற்றமும் அடைந்தனர்.
இவ்வாறான நகர்வின் இறுதிக்கட்டமாக இடம்பெற்ற தேர்தலின்போதும் பொதுஜன பெரமுனவுக்கு எதிராக வழமைபோலவே தமிழர் பிரதிநிதிகள் ஐ.தே.கட்சிக்கம் ரணிலுக்கும் வாக்களிக்கும்படி கோரி நின்றார்கள்.
ஆனால், அவர்கள் உள்ளடங்கலாக யாருமே எதிர்பார்க்காத நிலையில் தலைவர், ரணில் உட்பட ஐ.தே,கவினர் படுதோல்வியடைந்தார்கள். இப்படுதோல்வியானது வடக்கு – கிழக்கின் தமிழர் பிரதிநிதிகளது கள்ள மனங்களைப் பெரிதும் ஆட்டங்காண வைத்தபோதும் அவர்கள் அதைச் சிறிதளவேனும் வெளிக்காட்டவில்லை.
இதன் பின்னர் மகத்தான வெற்றியுடன் ஆட்சிக்கு வந்த பொதுஜன பெரமுனவின் தலைமைப்பீடத்தை அலங்கரித்து நின்ற மும்மூர்த்திகளான ராஜபக்ஷக்களுக்க எதிரான கிளர்ச்சியினால் அவர்கள் நாட்டைவிட்டு ஓட, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலின் உதவியை நாட, அவரும் அதற்குச் சம்மதித்து ஜனாதிபதியான அரசியல் ஆரோக்கியமற்றதும் சிரிப்புக்கிடமானதுமான திருக்கூத்தை நாட்டு மக்கள் விழி பிதுங்க நோக்கத் தவறவில்லை.
இத் திருக்கூத்தின் ஆரம்பத்திலிருந்தே ஜனாதிபதித் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் விரைவில் நடத்தப்படவேண்டுமெனப் பல்வேறு தரப்பினரும் இடித்துரைத்தபோதும்கூட ரணில் அவர்கள் முடிந்தளவு இழுத்தடித்துக் கொண்டேயிருந்தார்.
இந்நிலையில்தான் விரைவில் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலொன்று இடம்பெறுவதற்கான அறிகுறி தென்பட ஆரம்பித்துள்ளது.
அவ்வாறான ஜனாதிபதித் தேர்தலொன்று இடம்பெற்றால் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் வகிபாகம் வழமைபோலவே அவர்களுடைய பிரதிநிதிகளின் கோரிக்கையின்பாலான தலையாட்டிப் பொம்மலாட்டமாக அமையுமா? என்பதே நடுநிலையாளர்களின் மிகுந்த ஆதங்கமாக உள்ளது.
இவ்விடத்தில் நாம் இலங்கையின் ஜனாதிபதியாகத் தமிழர் ஒருவர் ஒருபோதும் வரமுடியாதென்பதை மனதில் மிக ஆழமாக நிலைநிறுத்திச் சிந்திக்கவேண்டியவர்களாகவுள்ளோம்.
இலங்கையின் ஜனாதிபதியோ அல்லது நாடாளுமன்றமோ தமிழ் மக்களுக்கு ஒருபோதும் விமோசனம் அளிக்கப்போவதில்லை என்பதுதான் வட்டுக்கோட்டைத் திர்மானத்தின் உள்ளார்த்தமும் அதற்கான மக்கள் ஆணையமாகும். எனவே, இத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விலகி நிற்பதுதான் முழுமையான நீதியின் பாலானதாகும்.
ஆனால், தேர்தலைப் பகிஷ்கரிப்பது என்பது சாத்தியப்பாடான ஒன்றல்ல. ஆகவே, வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வேண்டியவர்களாகவே உள்ளார்கள்.
அவர்கள் தென்னிலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர்களுக்குள் பக்கச் சார்பாக வாக்களித்து அவர்களது வாக்களிப்பு யார் பக்கம் இருந்தது என்பது தெரியவும், அவர்கள் சார்ந்த தரப்பினர் வெற்றிபெறாவிட்டால் கடந்த தேர்தலில் ராஜபக்ஷக்களின் வெற்றியின்போது அவர்கள் பாதிக்கப்பட்டதைப்போலவே பாதிக்கப்படுபவர்கள்.
எனவே வடக்கு – கிழக்குத் தமிழர் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக (ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் நிலை இல்லாமல் இருந்தாலும்கூட) ஒரு பொதுவேட்பாளரைச் சகல அரசியலாளர்களும் இணைந்து நிறுத்துவதன் மூலம் வடக்கு – கிழக்குத் தமிழ் மக்களை அவ்வேட்பாளருக்கு வாக்களிக்க வைத்து அவர்களது மனக்குறையை முற்றுமுழுதாக வெளிப்படுத்த வைப்பதுதான் அறிவுடைமையாகும். இது தவறின் தமிழ் மக்களுக்கு காத்திருப்பது மேலும் மேலும் பெரும், பெரும் அழிவே!
வீரப்பதி விநோதன்
தென்கருணை, கரவெட்டி