இன்று முதல் அமுலுக்கு வரும் நிகழ்நிலைக் காப்புச்சட்டம்!

நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை இன்று அங்கீகரித்துள்ளதுடன், இந்தச் சட்டமூலம் 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டமாக நடைமுறைக்கு வருகிறது.

புதிய சட்டம் பேச்சு சுதந்திரத்தை முடக்கும் என்று குற்றம் சாட்டும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் ஆர்வலர்களின் ஆட்சேபனைகளுக்கு மத்தியில், நிகழ்நிலை உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்தும் சட்டம், திருத்தங்களுடன் கடந்த ஜனவரி 24 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

சர்ச்சைக்குரிய மசோதா உள்ளூர் ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளின் கவனத்தை மட்டுமல்ல, இராஜதந்திரிகள் மற்றும் பெரிய சர்வதேச அமைப்புகளின் கவனத்தையும் ஈர்த்தது.

கடந்த செப்டம்பர் 18 ஆம் திகதியன்று அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டமூலம், நாட்டில் சில அறிக்கைகளின் நிகழ்நிலை தகவல்தொடர்புகளை தடைசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் தடைசெய்யப்பட்ட நோக்கங்களுக்காக தவறான அறிக்கைகள் மற்றும் பிற தொடர்புடைய விடயங்களைத் தொடர்புகொள்வதற்கான நிதி மற்றும் பிற ஆதரவை அடக்குவதற்கு உண்மையான மற்றும் நம்பகத்தன்மையற்ற இணைய கணக்குகளைப் பயன்படுத்துவதையும் தடுக்கிறது.

இதேவேளை, பாராளுமன்றத்தில் விவாதங்களுக்குட்படுத்தப்பட்டு திருத்தங்களுடன் கடந்த ஜனவரி 9 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தேசிய நீரளவை சட்டமூலம் மற்றும் ஜனவரி 10 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமூலம் ஆகிய சட்டமூலங்களிலும் சபாநாயகர் தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

இதற்கமைய குறித்த சட்டமூலங்கள் 2024 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க தேசிய நீரளவை சட்டம் மற்றும் 2024 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமாக நடைமுறைக்கு வருகின்றன.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply