கனடாவின் ஒட்டோவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவனில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
புதன்கிழமை இரவு 10:52 மணியளவில் 911 என்ற எண்ணுக்கு இரண்டு அழைப்புகள் வந்ததாக ஒட்டோவா பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சந்தேக நபரை சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர்.
இதேவேளை, கொலைச் சம்பவத்திற்கு முன்னர் இந்த இலங்கைக் குடும்பத்திடமிருந்து பொலிஸாருக்கு எவ்வித முறைப்பாடும் கிடைக்கவில்லை எனவும் ஒட்டோவா பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
கனடாவில் கல்வி கற்கும் ஃபேப்ரியோ டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை இளைஞரே இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் கொலை செய்யப்பட்ட குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் கொலை செய்வதற்கு கூரிய ஆயுதத்தை பயன்படுத்தியுள்ளதாகவும் கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொலை சம்பவத்தின்போது , தாய் மற்றும் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்த குடும்பத்தின் கணவர் காயங்களுடன் தப்பியுள்ளதால் அவரின் வாக்குமூலம் தான் என்ன நடந்தது என்பதை வெளிக்கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையிலேயே சம்பவம் நடந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இருப்பினும் நீதிமன்றத்தில் சந்தேகநபர் முழுமையான தகவல்களை வழங்காதமையினால் எதிர்வரும் 14ம் திகதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
சந்தேகநபர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்த சந்தேக நபர் விக்கிரமசிங்க குடும்பத்தை ஏன் கொலை செய்தார் என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.