மாளிகாகந்த நீதவான் வழங்கிய முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீதான விளக்கமறியல் உத்தரவை இரத்து செய்யக் கோரிய ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதியை நிர்ணயித்துள்ளது.
அதன்படி, 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதி தீர்மானம் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் குப்பிகள் ஊழல் தொடர்பான வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியாக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இதேவேளை, ரம்புக்வெல்லவின் இந்த மனு தொடர்பில் தலையிட்டு உண்மைகளை முன்வைக்க நீதிமன்றத்திற்கு அனுமதி வழங்குமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இடைக்கால மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
தனது இடைக்கால மனு மூலம், ரம்புக்வெல்லவின் ரீட் விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.