ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய தற்போது வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டங்களுக்கு மேலதிகமாக, மேலும் இரண்டு புலமைப்பரிசில் திட்டங்களை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது.
அதன்படி, பிரிவெனா மற்றும் பெண் பிக்குணி கற்கை நிறுவங்களில் கற்கும் பிக்கு மற்றும் பிக்குணிகளுக்கும் ஏனைய மாணவர்களுக்கும், க.பொ.த உயர்தரத்தில் தகவல் தொழில்நுட்பம் கற்கும் மாணவர்களுக்குமான புதிய புலமைப் பரிசில் வேலைத்திட்டம் இம்மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நாடளாவிய ரீதியில் பெண் பிக்குணி கற்கை நிறுவங்களுக்கும்,ஏனைய மாணவர்களுக்கான 822 கற்கை நிறுவனங்கள் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதோடு, இதற்காக மேற்படி கற்கை நிறுவனமொன்றுக்கு 06 புலமைப்பரிசில்கள் என்ற அடிப்படையில் நிறுவனத் தலைவர்களின் பரிந்துரைக்கமைய பயனாளிகள் தெரிவு செய்யப்படுவர்.
இரண்டு கட்டங்களாக வழங்கப்படும் இந்த புலமைப்பரிசில் பிரிவெனாக்களில் கற்கும் 5000 வறிய மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதோடு, முதல் கட்டத்தின் கீழ் 2024 மே மாதம் தொடக்கம் 12 மாதங்களுக்கு 3000/- வும் இரண்டாம் கட்டத்தின் கீழ் 24 மாதங்களுக்கு 6,000/- வும் வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விவரங்களையும் விண்ணப்பத்தையும் www.presidentsfund.gov.lk உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் www.facebook.com/president.fund உத்தியோகபூர்வ Face Book பக்கத்திலும் பெற முடியும்.
அதேபோல் இந்த விண்ணப்பம் மற்றும் அறிவுறுத்தல்களை 2024-05-10 அரச வர்த்தமானியில் பிரசுரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புலைமைப்பரிசிலுக்காக விண்ணப்பிக்கும் பிரிவெனாக்களில் பயிலும் வறிய மாணவர்கள் உரிய வகையில் நிரப்பட்ட, விண்ணப்பங்களை 2024 மே 22 ஆம் திகதிக்கு முன்னதாக பிரிவெனா தலைவர் / நிறுவனத் தலைவரிடம் மட்டும் கையளிக்க வேண்டியது அவசியமெனவும், அதன் பின்னர் நிறுவனத் தலைவர்களால் தெரிவு செய்யப்பட்டவர்களின் விண்ணப்பம் வலயத்துக்கு பொறுப்பான பிரதி கல்விப் பணிப்பாளர் ஊடாக ( பிரிவெனா) கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும்.
உயர்தரத்திற்கு தெரிவாகி தகவல் தொழில்நுட்ப பாடங்களை கற்கும் மாணவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய, இலங்கை தொலைத் தொடர்பாடல்கள் ஆணைக்குழுவின் ஒத்துழைப்பின் கீழ் ஜனாதிபதி நிதியத்தினால் இந்த புலைமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.
அனைத்து கல்வி வலயங்களிலும் முன்னெடுக்கப்படவிருக்கும் இந்த புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் கீழ் வலயமொன்றில் குறைந்தபட்சமாக 50 மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தெரிவு செய்யப்படும் 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய விண்ணப்பதாரிகளுக்கு 24 மாதங்களுக்கு 6,000/- வழங்கப்படும்.
இது தொடர்பிலான மேலதிக தகவல்களை www.facebook.com/president.fund உத்தியோகபூர்வ Face Book பக்கம் மற்றும் www.presidentsfund.gov.lk இணையத்தளம் , கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணைத்தளமான www.moe.gov.lk, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்குழுவின் இணைய பக்கத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
இதற்கான விண்ணப்பங்களை 2024 மே 22 ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதி நிதியத்திற்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, 2024 பெப்ரவரி 07 ஆம் திகதி ஜனாதிபதியால் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட கொள்கைப் பிரகடன உரைக்கு அமைவாக 2024 ஆம் ஆண்டுடிற்குள் பாடசாலை மாணவர்களுக்கான பல புலைமைப் பரிசில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் 2022/2023 க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து உயர் தரத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு நாடளாவிய ரீதியில் 100 கல்வி வலயங்களுக்கு 60 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றும் வரையில் 6000/- வழங்கப்படவுள்ளது.
தற்போதும் இந்த புலைமைப்பரிசில் திட்த்திற்காக தெரிவு செய்யப்பட்ட 6000 மாணவர்களின் விவரம் ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ Face Book பக்கத்திலும் இணையத்தளத்திலும் வௌியிடப்பட்டுள்ளன. அவர்களுக்காக 2024 ஆம் ஆண்டிலிருந்து புலமைப் பரிசுத் தொகை நிலுவை தொகையுடன் சேர்த்து வழங்கப்படவுள்ளது.
அதேநேரம் கல்விச் செயற்பாடுகளுக்காக பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் 01 – 11 தரம் வரையிலான 100,000 பிள்ளைகளுக்கான ஜனாதிபதி நிதியத்தின் புலமைபரிசில் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியிலிருக்கு 10,126 பாடசாலைகளை உள்வாங்கி ஒரு பாடசாலைக்கு குறைந்த பட்சமாக 04 புலமைப் பரிசில்களும் அதிகட்சமாக 04 புலமைப் பரிசில்களும் வழங்கப்படவிருப்பதோடு, 100,000 பாடசாலை மாணவர்களுக்கு மாதாந்தம் 3,000/- என்ற அடிப்படையில் வழங்குவதற்கான வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போதும் விண்ணப்பதாரர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் விரைவில் புலமைப் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.
தற்போதும் விண்ணப்பதாரர்களின் தகவல்கள் வலயக் கல்விக் காரியாலயங்கள் ஊடாக ஜனாதிபதி நிதியத்திற்கு அனுப்பப்படும் நிலையில், தரவுகள் முழுமையாக கணினி மயப்படுத்தப்பட்ட பின்னர் மாணவர்களுக்காக திறக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு புலமை பரிசுத் தொகை அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் குறுந்தகவல் ஊடாக அறிவிக்கப்படும்.