நேற்றிரவு (22) களனி பல்கலைக்கழக சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரா விடுதி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, குறித்த மாணவன் பல்கலைக்கழகத்தில் மதுபானம் அருந்தியதால் குறித்த மரணம் நேர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவன் தனது பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்களோடு இணைந்து அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு அதன்பின் அனைவரும் விடுதிக்கு சென்றதோடு, மதுபோதையில் இருந்த மாணவனை விடுதியின் நான்காவது மாடியில் உள்ள அவரது அறையில் விட்டுவிட்டு, ஏனைய நண்பர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதன்படி, குறித்த மாணவன் அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்ததால் ஜன்னல் ஊடாக கீழே தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாக முதல் கட்ட விசாரணையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
களனிப் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் பீடத்தின் கணக்கியல் துறையில் நான்காம் ஆண்டு மாணவனான பிரின்ஸ் ராஜூ பண்டார என்ற சென்டா என்று அனைவராலும் அறியப்படும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.