‘நாட்டில் வாழும் அனைத்து பிரஜைகளும் சமமாகவும், சமத்துவத்துடனும் நடத்தப்படுவார்கள்’- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

‘நாட்டில் வாழும் அனைத்து பிரஜைகளும் சமமாகவும், சமத்துவத்துடனும் நடத்தப்படுவார்கள்’ என என கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம் எனும் மகுடத்தின் கீழ் இம்முறை சுதந்திர தின நிகழ்வுகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடத்துகின்றது.

இம்முறை மக்களுக்கு முன்னுரிமை வழங்கி சுதந்திரதின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. செலவுகள் குறைக்கப்பட்டு, தேவையற்ற ஏற்பாடுகள் தவிர்க்கப்பட்டிருந்தாலும் சுதந்திர தினத்துக்குரிய கம்பீரமும், அபிமானமும் குறையாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெறும்.

காலணித்துவ ஆட்சியிலிருந்து எமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்றிருந்தாலும் எமது நாட்டை மாறி, மாறி ஆண்ட தரப்புகளிடமிருந்து மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கப்பெறவில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.

அதனால்தான் 76 வருடகால சாபத்துக்கு முடிவுகட்டி மக்களால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கப்பட்டது. எனவே எமது ஆட்சியின் கீழ் உண்மையான சுதந்திரம் என்றால் என்னவென்பதை மக்கள் உணர்வார்கள்.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் தான் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்ககூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எமது ஆட்சியில் நடைபெறும் முதலாவது சுதந்திர தினம் இதுவென்பதுடன், சுதந்திர தினம் என்பது மக்களுக்கானது என்பதும் இம்முறையே உறுதியாகியுள்ளது.

இன, மத, மொழி, குல பேதங்களுக்கு அப்பால் அனைத்து இன மக்களும் ஓரணியில் திரண்ட சூழ்நிலையில் கொண்டாடப்படும் சுதந்திரம் இதுவென்ற வகையில் நிச்சயம் இந்நாள் வரலாற்றில் இடம்பிடிக்கும்.

வடக்கு, கிழக்கு, மலையகம் என நாட்டில் வாழும் அனைத்து பிரஜைகளும் சமமாகவும், சமத்துவத்துடனும் நடத்தப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply