
நாட்டைக் கட்டியெழுப்ப வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான அடிப்படை நடவடிக்கை இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக எடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு சினமன் லைப் ஹோட்டலில் இன்று (19) நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னரான கருத்தாடல் (“POST BUDGET FORUM 2025”) இல் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த அரசாங்கங்களின் தவறான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வங்குரோத்தடைந்த நமது நாடு, தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட தகுதிகாண் காலத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்த சூழ்நிலையில் ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான அடிப்படை நடவடிக்கை இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக எடுத்துள்ளதாகக் கூறினார்.
வங்குரோத்தடைந்த ஒரு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப பல உலக நாடுகளுக்கு ஒரு தசாப்தம் வரை சென்றாலும், இலங்கை அதிலிருந்து மீள்வதற்கு ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலமே செல்லும் என்று கணிப்பிட முடியும் என்றும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.
கடன் மறுசீரமைப்பு மூலம் கிடைத்த மூன்று வருட சலுகைக் காலத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி, 2028 ஆம் ஆண்டுக்குள் சரியான பொருளாதார முகாமைத்துவத்தின் மூலம் கடன் திருப்பிச் செலுத்தும் திறனை அடைய அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும் ஜனாதிபதி அநுர திசாநாயக்க தெரிவித்தார்.
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அரச வருவாயை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.1 வீதமாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும், முன்னுரிமை அடிப்படையில் நிதியை செலவிடுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.