பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பின்லாந்தில் ஒரு நாள் பிரதமராக 16 வயது சிறுமியொருவர் பதவியேற்றுக் கொண்டார்.
இதன்படி, தெற்கு பின்லாந்தில் உள்ள வாக்சி (Vaaksy) என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஆவா முர்டோ (Aava Murto) என்ற குறித்த சிறுமி நாட்டின் பிரதமராக நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார்.
பாலின சமநிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 11ஆம் திகதியை பெண் குழந்தைகளுக்கான சா்வதேச தினமாக ஐ.நா. கடைப்பிடித்து வருகிறது.
இந்நிலையில், குறித்த தினத்தை முன்னிட்டு பின்லாந்தில் பெண்கள் பொறுப்பேற்பு நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, மிகச் சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஆவா முர்டோவை ஒரு நாள் பிரதமராக பிரதமர் சன்னா மரீன் அறிவித்தார்.
இதையடுத்து பிரதமராகப் பதவியேற்ற ஆவா முர்டோ, பெண்கள் தொழில்நுட்பத்தை அணுகுவது ஒரு குறிப்பிடத்தக்க உலகளாவிய சமத்துவ பிரச்சினையாகும் எனவும் இது தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்னும் கூறினார்.
அத்துடன், சிறுமிகளுக்கும் டிஜிற்றல் எதிர்காலம் உள்ளதால் அவர்கள் தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டவேண்டும் என முர்டோ வலியுறுத்தினார்.
இதேவேளை, தனது பிரதமர் பதவி நாளில் அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை முர்டோ சந்தித்திருந்தார்.
பெண்களின் உரிமைகள் குறித்து உலக நாடுகளில் பின்லாந்து தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. பிரதமர் மரின் பின்லாந்தின் கூட்டணி அரசாங்கத்தை வழிநடத்துகிறார். குறித்த கூட்டணியில் உள்ள ஐந்து கட்சிகளின் தலைவர்களும் பெண்களாகவே உள்ளனர்.
பின்லாந்து, 1906ஆம் ஆண்டில் ஐரோப்பாவின் முதல் பிரதேசமாக மாறியதுடன் 1917இல் அந்நாடு ரஷ்யாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. மேலும், அனைத்து பெண்களுக்கும் வாக்களிக்கவும் பதவிகளுக்கு போட்டியிடவும் சட்டப்பூர்வ உரிமைகளை பின்லாந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.