யாழ்ப்பாணத்தில் 45ஆயிரம் பேர் பாதிப்பு

புரெவி புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் காற்றினால் நேற்று இரவு 10 மணி வரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 45ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை 13 ஆயிரத்து 707 குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்து 318 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அத்தோடு, யாழ். மாவட்டத்தில் தற்போது 34 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு ஆயிரத்து 167 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 927 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடும் காற்றினால் 48 வீடுகள் முழுமையாகவும், ஆயிரத்து 963 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

குறிப்பாக, யாழ். மாவட்டத்தில் பருத்தித்துறை, சண்டிலிப்பாய் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளவர்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புரெவி புயல் காரணமாக பொன்னாலை கடலில் காணாமல்போன கடற்றொழிலாளி காரைநகர் ஊரி கடலில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் காணாமல் போயிருந்த அவர், இலங்கை நேரப்படி நேற்று இரவு 8.30 மணியளவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir