சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் அடை மழை

சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து அடை மழை பெய்து வருகின்றதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்

அத்துடன், நேற்று(6) இரவு அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை ,இறக்காமம் மற்றும் மல்வத்தை ஆகிய பகுதிகளில் பெய்த மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையினால் சம்மாந்துறை பகுதி வளத்தாப்பிட்டி வில்வம் குளத்தில் நீர் நிரம்பி வெளியேறியதுடன் குளத்தின் அருகில் சென்ற வாகனமும் தடம்புரண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து வெளியேறியதை தொடர்ந்து பொதுமக்கள் வலை மற்றும் தூண்டில் மூலம் மீன்களை பிடித்து வருகின்றனர்.

இதேவேளை நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சொறிக்கல்முனை சம்மாந்துறை பகுதியினை இணைக்கும் வழுக்கமடு பாலம் நீரில் மூழ்கி காணப்பட்டதுடன் வயல் நிலங்களும் நீரில் மூழ்கின.

அத்துடன் நாவிதன்வெளி பகுதியில் உள்ள வயல் நிலங்களில் சில சட்டவிரோதமாக தனியாரினால் நீர்பாசன கால்வாய்கள் அடைக்கப்பட்டுள்ளமையினால் நீர் வடிந்தோட முடியாத நிலைமை தோன்றியுள்ளது.

பாய்ந்தோடும் வெள்ள நீர் கிட்டங்கி பாலத்தின் ஊடாக பாய்ந்து மிக வேகமாக செல்வதனால் மீனவர்கள் அவதானமாக செயற்பட்டு வருகின்றனர்.

குறித்த வெள்ள நீர் பாய்ந்தோடுவதனால் அதிகளவான மீன்கள் பிடிக்கப்பட்டு வருகின்றது.

பிடிக்கப்படும் மீன்களில் பனையான் ,செப்பலி ,கணையான் ,மீசைக்காரன் மற்றும் கெழுறு ஆகியவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வெள்ள நீர் வடிந்து செல்வதற்காக சல்பீனியா தாவரங்களை அகற்றும் முயற்சியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir