டில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக, இங்கிலாந்து பார்லி.,யில் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியா – பாகிஸ்தான் பிரச்னை என தவறாக பதில் அளித்தது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக கூறினார். இதற்கு இந்திய அரசு ஆட்சேபனை தெரிவித்தது. இ
ந்நிலையில், இந்த போராட்டம் தொடர்பாக இங்கிலாந்தின் கவலைகளை இந்திய பிரதமர் மோடிக்கு தெரியப்படுத்துமாறு இங்கிலாந்தின் எதிர்க்கட்சி எம்.பி.,யும், சீக்கியருமான தன்மன்ஜீத் சிங் தேசி, பார்லிமெண்டில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக பேசிய போரிஸ் ஜான்சன், ‛விவசாயிகள் பிரச்னையை இந்தியா-பாகிஸ்தான் இடையே தீர்க்க வேண்டிய பிரச்னை,’ என தவறுதலாக பதிலளித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே என்ன நடக்கிறது? என்பது குறித்து எங்களுக்கு தீவிர கவலைகள் உள்ளன. ஆனால் இவை அனைத்துக்கும் இரு அரசுகளும் தீர்வுகாண முன்வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான எந்த பிரச்னையையும் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணவேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு’ எனக்கூறினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தேசி, பிரதமர் போரிஸ் ஜான்சனை தனது டுவிட்டர் பக்கத்தில் சாடியிருந்தார். அவர் பதிவிட்டதாவது: ‘இந்தியாவில் வேளாண் சட்டங்கள் பற்றி அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு பயன்படுத்தியதை கண்டு பலரும் அச்சமடைந்தனர். அகிம்சையாக போராடுவது அனைவரின் அடிப்படை உரிமையாகும். நமது பிரதமர் என்ன பேசுகிறார் என்பதை அவர் உணர்ந்திருந்தால், நன்றாக இருக்கும்’ என அதில் கூறியிருந்தார்.