கொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் அரசு மீழ்பரிசீலனை செய்ய வேண்டும் என்று சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் / செயலாளரினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எமது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்தும் முகமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கமும், சுகாதார பிரிவினரும், முப்படை மற்றும் பொலிசாரும் இணைந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு இலங்கைவாழ் அனைத்து சமூகங்களும் வழங்கிவரும் முழு ஒத்துழைப்பின் காரணமாக இன்று இந்த கொரோனா நோய்த் தொற்றை மட்டுப்படுத்த முடிந்திருப்பதையிட்டு பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்
இந்நிலையில், எமது சகோதர சமூகங்கள் தங்களது சித்திரைப் புத்தாண்டு மற்றும் வெசாக் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, மிக எளிமையான முறையில் தத்தமது வீடுகளில் கொண்டாடியதை நாங்கள் அனைவரும் அறிவோம்.
அதற்கமைவாக, நாமும் எமது நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டும், சகோதர சமூகங்களின் மனங்களைப் புண்படுத்தாத வகையிலும் இந்த புனித நோன்புப் பெருநாளை வழமைபோன்று கொண்டாடுவதில் இருந்தும் தவிர்ந்து, எமது வீடுகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் அதனை ஒரு வணக்கமாக மேற்கொள்வோம்.
மேலும் களியாட்டங்கள் சுற்றுலாக்கள் போன்றவற்றிலிருந்து முற்றாகத் தவிர்ந்து கொள்வதோடு உறவினர் வீடுகளுக்கு செல்வதிலிருந்தும் தவிர்ந்து கொள்வோம். இது எமது நாட்டுக்கும் சகோதர சமூகத்தினருக்கும் எமது சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்த நமக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாகும். அதனை நாங்கள் முற்றுமுழுதாகப் பயன்படுத்திக் கொள்வதோடு, இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில், எமது பெருநாளுக்கான செலவுகளை நிர்க்கதியான நிலையில் உள்ள குடும்பங்களுக்கு வழங்கி இறைவனின் நல்லருளைப் பெற்றுக்கொள்ள அனைவரும் முயற்சி செய்வோம்
நாங்கள் எமது பெருநாள் உடைகளைக் கொள்வனவு செய்வதற்காக கடைத்தெருக்களிலும், பஸாரிலும் கூடியிருப்பதானது, சில இனவாத ஊடகங்கள் எமது சமூகத்தின் மீது நாட்டுப் பற்றற்றவர்கள் என்ற முத்திரை குத்துவதற்கு ஏதுவாக அமைந்துவிடக் கூடும். ஆகையால் கடைகளுக்குச் செல்லும் நாங்கள் உரிய சமூக இடைவெளியை பேணிக் கொள்வதில் அதிக அக்கறை செலுத்துவோம்.
குறிப்பாக, எமது பெருநாள் நிகழ்வுகள் அனைத்தையும் நாங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதை முற்றுமுழுதாக தவிர்ந்து கொள்வோம்.
நாட்டின் இக்கட்டான சூழ்நிலையில் மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கும் நாம் வீதிகளில் முகக் கவசம் மற்றும் தலைக்கவசம் இன்றி பயணிப்பது, கூட்டமாக இருப்பது மற்றும் கூடி நிற்பது போன்றவற்றில் இருந்து தவிர்ந்து இந்தக் கொடிய நோயை வெற்றி கொள்ள அரசு முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் முப்படையினருக்கும், சுகாதாரத்துறையினருக்கும் பூரண ஒத்துழைப்பினை வழங்குவோம்.
மேலும், நமது நாட்டில் கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம் ஜனாசாக்கள் எரியூட்டப் படுவதானது, எமது மத சார் நம்பிக்கைக்கும் உரிமைக்கும் குந்தகமாக அமைந்து விடாத வண்ணம் சர்வதேச சுகாதார நிறுவனத்தின் நியமங்களுக்கு ஒப்ப அவற்றை அடக்கம் செய்வதற்கு உரிய வழிமுறைகளை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.