ஒரு இலட்சம் வேலை வாய்ப்பின் இரண்டாம் கட்ட நேர்முகப்பரீட்சை

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்துக்கமைய ஒரு இலட்சம் வறிய குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இரண்டாம் கட்ட ஆட்சேர்ப்புக்கான நேர்முக பரீட்சை இன்று (21) மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவிருக்கிறது.

கல்விப் பொதுத்தராதர சாதாரண சித்தியடையாத வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பல்நோக்கு செயலணி திணைக்களம் இந்த நேர்முக பரீட்சைக்கான ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும் இன்று தொடக்கம் மூன்று தினங்களுக்கு பிரதேச செயலகங்களில் குறித்த நேர்முகப் பரீட்சை இடம் பெறுமென்றும் அறிவிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் உரிய ஆவணங்களுடன் உரிய வேளைக்குள் சமூகமளிக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

அவர் இது பற்றி கருத்து வெளியிடுகையில் ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தில் வழங்கப்படும் இந்த இளைஞர் யுவதிகளின் குடும்பங்களில் வறுமை அகல்வதற்கு இந்த வேலைவாய்ப்பு வழிவகுப்பதாக இங்கு தெரிவித்தார்.

இன்று நடைபெறவிருக்கும் இரண்டாம் கட்ட நேர்முகப் பரீட்சையில் பங்கு பற்ற இம்மாவட்டத்தில் 548 இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப் பட்டிருப்பதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இந்த வேலைவாய்ப்பு திட்டத்தில் ஏற்கனவே 248 இளைஞர்கள் தெரிவுசெய்யப்பட்டு இரண்டாம் கட்ட பயிற்சிகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் அரசாங்க அதிபர் தமது தகவலில் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir